Pongu Tamizh Pongu Tamizh  

இரவியின் கையெழுத்து பட்டிக்காடா? பட்டணமா?

இரவியின் கையெழுத்து பட்டிக்காடா? பட்டணமா?
இரவி பரமேஸ்வரி

 

'வூல்சிலி' (Woolsely) மிசின் இறைக்கிற போது பார்த்திருக்கிறீர்களா? குபுகுபுவெனத் தண்ணீர் பெருகும். என் சிறு பிள்ளை ஆச்சரியங்களில் ஒன்று. அது சுடுதண்ணியையும் உற்பத்தி ஆக்கி சின்ன பைப் வழியாக இறைக்கிறது. ஆக ஒரு இறைக்கிற மிசின். ஆறு பெருக்கெடுத்தது போல பச்சைத் தண்ணீயையும், மாடு மூத்திரம் பெய்வது போல சுடுதண்ணியையும் இறைக்கிறதென்றால் என் சிறு வயதில் மகா ஆச்சரியம் அது.

இந்த ஆலாபனை எதற்கு? இனித்தான் விசயத்திற்கு வருகிறேன். இந்த 'வூல்சிலி' மிசினின் மேற்பாகத்தில் சின்ன தண்ணீர்த் தாங்கி போல் ஒன்று இருக்கும். அதிலிருந்து தான் சுடுதண்ணீர் உற்பத்தியாகிறது. வூல்சிலி மிசின் படபடவென புகை கக்கி இயங்குகிறபோது தண்ணீர் தாங்கியில் உள்ள சுடுதண்ணீர் துடிதுடிக்கும் அல்லது நடுநடுங்கும்.

அப்படி ஒரு துடிதுடிப்பை அல்லது நடுநடுங்குதலை, என் உடம்பு பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறது. அப்படிப் பலமுறை என்றாலும் ஒரேயோரு நிகழ்வு நடைபெறுகிற பொழுதுதான். அந் நிகழ்வு உதைபந்தாட்டம்.

இப்பொழுது உலக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெறுகிறது. வெய்யில் சுட்டெரித்த சென்ற ஞாயிறு (27.06.10) வரைக்கும் அவ்வாறு பதைபதைத்தபடி இருந்தேன். இங்கிலாந்து ஜேர்மனியிடம் 4 – 1 என்று தோற்ற பிறகு இனிப் பதைபதைக்க ஏதுமில்லை என்று எழுந்து விட்டேன்.

எழுந்தவுடன் செய்த முதல் காரியம் எனது காரில் இருபக்கமும் கட்டியிருந்த இங்கிலாந்துக் கொடியைக் கழற்றியதுதான். சூரியன் சுட்டுவிடாத பின்னேர வெய்யிலுக்கு விசரன் போல வீதியெங்கும் அலைந்தேன். வெய்ன் ரூனி (Rooney), ஜெரார்ட் (Gerrad), ரெறி (Terry), லம்பர்ட் (Lamperd), பயிற்சியாளர் கப்பலோ (Cappello) என்று எவர் மீதும் கோபம் வரவில்லை. கவலைதான் வந்தது. உடனே இன்னொரு முடிவு எடுத்தேன்.

தோற்றுவிட்டார்கள். அதனால் வெறுப்பதில் அர்த்தமில்லை. அவர்கள் நமது வீரர்கள். வென்றாலும், தோற்றாலும் அவர்களுக்கான கௌரவம் கொடுப்பது நமது கடன். நான் என்ன செய்தேன். கழற்றி வைத்த இங்கிலாந்துக் கொடியை மீண்டும் காரில் கட்டிவிட்டேன். ஆனால் முள்ளாய் நெஞ்சில் ஏதோ நெருடிக் கொண்டிருந்தது. எப்பவும் நாங்கள் தோற்கிற் கட்சிதானே? என் வீட்டு வீதியில் 'கோஸ்ற்கட்டர்' (Costcutter) கடை வைத்திருக்கிற தருமனண்ணையும் அதைத்தான் சொன்னார். 'எல்லாத்திலையும் நாங்கள் தோக்கிறம். என்ன இரவி?'

இல்லை என்று சொன்ன ஒரு காலமும் இருந்தது. மகாஜனாக் கல்லூரிக்குப் படிக்கப் போன காலம் அது. நான் போன அந்த வருசமே, பனி பெய்கிற அந்த முதல் மாசத்திலேயே எங்கள் மகாஜனாக் கல்லுரி 'ஓல் சிலோன் சம்பியன்' (All Ceylon Champion) ஆனது. எங்கள் மகாஜனா வீரர்கள் தெல்லிப்பளைச் சந்தியிலிருந்து நடைபவனியாக வருகிறார்கள். அளவெட்டியிலை கோவிந்தண்ணை தவிலையும் தூக்கிக் கொண்டு ஓடிப்போய்விட்டார். இரண்டு பெற்றோல்மாக்ஸ் வெளிச்சம் பிடிக்க சந்தியிலிருந்து ஒரு மைலுக்கு அங்கால அம்பனையில் இருக்கிற எங்கள் பள்ளிக்கு வீரர்கள் வருகிறார்கள். மோகன்ராம், கெய்சர், சந்திரலிங்கம், இராஜகாந்தன், சமரக்கொடி, வடிவேஸ், சிறீகாந்தன், சுனக்கி.....இன்னும் பெயர் மறந்து போனவர்கள்.

முன்வீட்டு முருகனண்ணை 'மற்ச்' (Match) நடக்கிற நாளுகளிலை பின்னேரக் கள்ளை இறக்கிறேல்லை. பனையிலை கட்டின முட்டி இரவிரவா நிரம்பி வழியுமோ என்னவோ? அப்படிக் கள்ளு இறக்காத ஒரு நாள் அவருடைய கையைப் பிடிச்சுக் கொண்டு 'மற்ச்' பார்க்கப் போனேன். அது மகாஜனாக்கும், ஸ்கந்தாவுக்குமான சம்பியன் மற்ச். 1971இல் மாரி காலத்தில் நடந்தது.

மத்தியானம் சாப்பிட்டு இரண்டு மணிக்கே வெளிக்கிட்டம். கத்தரிக்காய் வெள்ளைக்கறி, முருங்கையிலை வறை, சூடைமீன் சொதி, ஓரா மீன் குழம்பு. இத்தனையும் சாப்பிட்ட கையில் மீன் மணத்தது. முருகனண்ணையிட்டை அப்பா ஒண்டரை ரூபா காசு குடுத்தார். குருத்துப் பச்சை நிற ரெர்லின் சேர்ட் போட்ட என்ரை கையைப் பிடிச்சு பெரியவிளான் சந்திக்கு நடத்திக் கூட்டிக்கொண்டு போனார் முருகனண்ணை. 788 பஸ் எடுத்து யாழ்ப்பாணம் போனம்.

இரவிரவா அம்மாளை நான் நேர்ந்திருந்தேன். சுவாமி அறைக்குள்ளை நாலைஞ்சு தரம் கடவுள்மார் எல்லாரையும் வேண்டினன். 'சம்பியன் மற்ச்சிலை மகாஜனாவை வெல்லப் பண்ணவேணும்,' பிறகு வெளிக்கிடக்கையும் விபூதி அப்பி மன்றாட்டமா கடவுள்மார் எல்லாரிட்டையும் கெஞ்சினன்.

எனக்கு கால் பதறத் தொடங்கிச்சுது. உடம்பு நடுங்கிச்சுது. எப்பிடியும் அதை என்னாலை நிறுத்த முடியாது. உள்ளங்கை, உள்ளங்கால் எல்லாம் வேர்வை கசியுது. இந்தக் குளிர் தேசத்திலை, இந்தக் 'கிழடு' தட்டின வயதிலையே மற்ச் தொடங்க அப்பிடி வேர்க்கிற எனக்கு, அந்தச் சின்னப் பிள்ளையிலை வெக்கை மிகுந்த ஊரிலை எப்படி வேர்க்காமல் விடும்? ஆனால் இந்த வேர்வை வேறு. பதட்டத்திலை வாற வேர்வை.

'மற்ச்' முடிய முருகனண்ணைக்கு வலு புளுகம், 'பாத்தியே ராசா அடிச்சிட்டாங்கள். பாத்தியே ராசா என்ன அடி! முயலின்றை விளையாட்டைப் பாத்தீயே, அடியென்டால் அடிதான். மகாஜனாவை வெல்ல ஆராலும் ஏலுமே? இரண்டுக்கு ஒண்டு. நெவில் பறந்த வெற்றி' முருகனண்ணை இமைச் சொல்லி வாய் சிவக்க வெத்திலை போட்டார்.

அடுத்த வருசம் (1972) நடந்த சம்பியன் மற்ச் எங்களது உரோச நரம்புகளை சுண்டி இழுத்தது. ஒரு சம்பியன் மற்ச்சிலை அவ்வுளவு கோல் அடிச்சதா யாழ்ப்பாண வரலாற்றிலேயே கிடையாது. மகாஜனா அடிச்சது மொத்தம் ஆறு கோல்கள். அவ்வுளவும் அடிக்கக் காரணமாக இருந்தது ஒரு கேள்வி அல்லது வெறும் வாக்கியம். ஒரு தேடா வளையக் கயிறு அல்ல. வாழையின் வெறும் நார் போன்ற வாக்கியம். ஆனால் அது தேடாவளையக் கயிற்றை விட இறுக்கக் கட்டிவிட்டது. அந்த வாக்கியம் இது தான். 'பட்டிக்காடா பட்டணமா?'

அது பட்டிக்காட்டு மகாஜனாவின் உரோச நரம்புகளை பட்டெனவே சுண்டிவிட்டது. பட்டணத்தில் இருக்கிற 'சென்றல் கொலிஜ்' எனப்பட்ட யாழ் மத்திய கல்லூரியினர் எழுதிய வாசகம் அது. 'பட்டிக்காடா பட்டணமா?'

எங்கள் கல்லூரி பட்டிக்காட்டில் இருந்தது. முன்னால் வயல் வெளிக்குள் இருந்து சோளகக் காற்று குபுகுபுவெனப் பாய்ந்து வருகிற பள்ளிக்கூடம். வெளிச்சுவரில் செம்பாட்டு மண் பூசப்பட்டிருக்கும். யன்னலால் எட்டிப் பார்த்தால் ஒழுங்கை தெரிகிற வகுப்பறைகளில் யன்னல் கம்பிகள் உடைபட்டிருக்கும் அல்லது நெளிவுபட்டிருக்கும். எண்ணெய் வழிகிற தலையுடன் பல மாணவர்கள் வாற பள்ளிக்கூடம். வெள்ளன எழும்பி தோட்ட வேலைகளைச் செய்துவிட்டு சேத்துக் காலுடன் நேரம் போச்சுதே எண்டு மணியடிக்க ஓடிவாற மாணவர் இருக்கினம். காலின்ரை பித்த வெடிப்புக்குள்ளை செம்பாட்டு மண் அடைஞ்ச வாத்திமார் இருக்கினம். நீட்டி முழக்குவானேன்.? பட்டிக்காட்டுப் பள்ளிக்கூடம். அதுதான் சென்றல் கொலிச்சார் எழுதிச்சினம். 'பட்டிக்காடா பட்டணமா?' யாழ்ப்பாண ரவுண் முழுக்க அது ஒட்டப்பட்டிருந்தது.

அம்மாளை நான் கும்பிடு கும்பிடு எண்டு கும்பிட்டன். சுவாமி அறைக்குள்ளை ஏழெட்டு நேரம் 'அடுசிடை படுசிடை'யாக் கிடந்தன். நெத்தியிலை விபூதி அள்ளி அப்பினதிலை கண்ணுக்குள்ளையும் அது போச்சு. எப்பவும் ஒரு வசனம் மாத்திரம் என்ரை வாயிலை இருந்து வந்தது. 'மகாஜனா சம்பியன் அடிக்க வேணும்'

என் சின்னி விரலைப் பிடிச்சு அப்பாதான் அந்தச் சம்பியன் மற்சுக்கு கூட்டிக் கொண்டு போனார். திருநெல்வேலி பரமேஸ்வராக் கொலிச்சிலை சம்பியன் மற்ச் நடக்குது. நாச்சிமார் கோயிலடியிலை 769ஆலை இறங்கி கிழக்குப் பக்கமாக நீட்டுக்கு நடந்தம்.

பரமேஸ்வராக் கொலிச்சடிக்கு வந்தபோது காந்தனண்ணை மைக்கில் கத்துகிறார்.

ஜனா, ஜனா

மகாஜனா.

இதன் இறுதி வசனம் இப்படியாக இருந்தது.

பட்டிக்காடா?

பட்டணமா?

பட்டிக்காடா? என்றபோது வந்த பெருமிதம் பட்டணமா என்ற போது இழிவாயிற்று. காந்தனண்ணை அதில் கொண்டு வந்த ஏற்ற இறக்கம் யாருக்கும் எளிதானதல்ல.

000000

மனோரஞ்சனுக்குள் கோபம் இருந்தது. ஆவேசம் இருந்தது. ஓர்மம் இருந்தது. வன்மம் புகுந்தது. மேலாக சாதிக்கும் வலிமை இருந்தது. புறப்படுகிற் போதே மகாஜனாவின் நடராசர் கோயிலில் அடித்து சத்தியம் செய்தான். 'நான் நான்கு கோல் போடுவன்.'

ஜெயராஜ் வலது முனைக்கு பந்தைத் தள்ளிவிட்டான். மனோரஞ்சன் நுனிக்காலால் பந்தை எம்பிவிட்டு ஓடினான். வேகம். வேகம். ஒருவராலும் அவன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாதிருந்தது. 'அவுட்லைனில்' அருகுடன் 'டபிள்' போட்டு சுழித்து, வளைத்து, நெளித்து வெட்டி, குண்டியால் ஆடி, எதிராளியை தளம்பப் பண்ணி, மத்தியை நோக்கித் தன் முனைப்பைக் குவித்து, பந்தை ஒங்கி உதைத்து வேகம் கொள்கிறான். பந்து காலுக்குள் - காலுக்குள் பந்து. இரண்டில் எது வேகம்? இரண்டு வேகமும் ஒன்று.

மனோரஞ்சனின் வேகத்திற்கு ஈடுகொடுக்கிறான் ஜெயராஜ். எதிராளிகள் துரத்துகிறார்கள். 'மனோ...மனோ' ஜெயராஜ் கத்துகிறான். மனோரஞ்சனுக்கு ஒன்றும் கேட்கவில்லை. 'இஞ்சாலை தட்டிவிடு.' திரும்பிப் பார்க்கிறானேயில்லை. உருத்திர தாண்டவம் ஆடுகிற நடராஜராக மனோரஞ்சன்.

மனோரஞ்சனுக்கு ஒன்று மாத்திரம் தெரிகிறது. வலை சூழ்ந்த கோல் போஸ்ற். இலக்குப் பார். பந்தை உதை. வெளியிலிருந்து 'ரீப்பி' கத்துகிறார். 'பாலு பிறீயா வாறான். அவனிட்டக் குடுத்திட்டு றைற்றுக்கு ஓடு. மனோரஞ்சன் கேட்கிறானில்லை. நாளைக்கு 'ரீப்பி' உதைக்கப் போறார். தெரியும். உதைக்கட்டுமன். அதுக்கிடையிலை சம்பியன் அடிச்சிடுவம் தானே?

மனோரஞ்சனின் வேகத்துக்குச் கம்பங்கள் காத்திருந்தன. எதிர்க்குழுவின் கோல் கீப்பர் முகம் கறுத்து, வெளுத்து, புயலை எதிர்பார்த்து நடுங்குகிறான். கலங்குகிறான். முழுசுகிறான். முகத்திலை வியர்வை துளிர்க்கிறது. தெரிகிறது வருவது புயல். மனோரஞ்சன் என்கின்ற அதிரடிப்புயல். பட்டிக்காடா பட்டணமா என்று எழுதாமல் விட்டிருக்கலாம். மீசை தடித்த, கட்டை மொட்டையான வெள்ளை வாத்தியின்ரை வேலை அது.

பந்து அதிர, கால் அதிர, பார்வையாளர் அதிர, நிலம் அதிர, மரம் அதிர, நீ அதிர, நான் அதிர ஒரு உதை. ஓங்கி ஓர் உதை.

பந்துக்கு ஓர் உதை. பட்டிக்காடா பட்டணமாவிற்கு ஓர் உதை. மகாஜனாவின் வெற்றியைச் சொல்ல ஓர் உதை. மகாஜனாவின் வீறாப்பைக் காட்ட ஓர் உதை. உதை, உதை, உதை......வலை பொருமிப் பொருமி அடங்கிற்று. மத்தியஸ்தர் சீவரத்தினம் கோல் என்று நீண்ட விசில் ஊதினார். சடக்கென விசில் ஊதி விளையாட்டு தொடங்கி ஒரு நிமிசம் கூட ஆகவில்லை. ஒரு கோல் அடித்ததற்கான விசில்.

அன்றைய இறுதியாட்டத்தில் ஆறு கோல்கள். மனோரஞ்சன் இரண்டு. முயல் இரண்டு. ஜெயராஜ் ஒன்று. செல்வராசா ஒன்று.

காந்தனண்ணை மைக் வைத்துக் கத்துகிறார்.

ஜனா, ஜனா

மகாஜனா

வட்ஸ் த கலர்

பிறவுண் அன்ட் வைற்

வட்ஸ் த ஸ்கோர்

சிக்ஸ் நில்

ஏலுமா?

ஏலாது

ஏலுமென்டால்?

பண்ணிப்பார்.

 

பட்டிக்காடா?

பட்டணமா?

00000

வென்றவர் கதைதான் வரலாறு. தோற்றவர் கதை வெறும் சாம்பல். எம்மை மேவிச் சாம்பல் படர்ந்து விட்டது. சாம்பல் என்றால்? ஒரு கவிஞன் சொன்னான்.

'சாம்பல் அறியீரோ?

மேலே வெறும் தூள், புழுதி

கிளறக் கிளற தணல் பிறக்கும்'

7/18/2010 11:41:17 AM

உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

"வென்றவர் கதைதான் வரலாறு,தோற்றவர் கதை வெறும் சாம்பல். "

ராஜபக்சவுடன் ராஜபவனி வருகின்ற 'மகாஜனா'க்களுக்காக எழுதப்பட்ட உருவகக் கதையா இது?

ஜனா,ஜனா
மகாஜனா
அப்பி ரட்ட
சிங்கள ரட்ட

கோவணம், xx
 
புதினங்கள்
செய்திகள்